Breaking News

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 7.25 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு பேச்சு.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் மேயராக நகராட்சி தலைவராக இருந்த முத்துதுரையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு கரைக்குடி மாநகராட்சி புதிய மேயராக முத்துதுரையை  அறிமுகப்படுத்தி அவருக்கு 101 சவரனில் செய்யப்பட்ட தங்க மாலை அணிவித்து, வெள்ளியிலான செங்கோல் கொடுத்தனர். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என். நேரு, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றும்போது 628 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் எடுக்கப்பட்டு 4.28 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது முதல்வரின் சீரிய நடவடிக்கையால் கடந்த 3 ஆண்டுகளில் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக 7.25 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது என்றும், 16 புதிய கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை அனுப்பபட்டு நிதி ஒதுக்கீடுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். 

ஜல்ஜீவன் திட்டத்தில் ஒரு ரூபாய் செலவு என்றால் 25 காசு தான் ஒன்றிய அரசு நமக்குத் தருகிறது. மீதியை முதல்வர்தான் தருவதாக தெரிவித்தவர், தமிழகத்தில் ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் நிதி கிடைத்தவுடன் கூடுதலான குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படும் என்றார். மதுரை நகர் பகுதியில் ரூ 1800 கோடி செலவிலும், மதுரை புறநகர் பகுதியில் 3000 கோடி செலவிலும்  நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் துவக்கி வைக்க உள்ளதாகவும், அனைத்து பெரு நகரங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!