புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வையாபுரி மணிகண்டன், துணைநிலை ஆளுநர்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில்..
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்துக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தினோம். இதையேற்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் இன்று 15.10.2024 செவ்வாய்க்கிழமை, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.
பேரிடர் காலத்தில் மாணவர்களியன் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்கிறது. ஆனால் சுயாட்சி என்ற போர்வையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் தொடர்ந்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடி வருகிறது. பேரிடர் காலத்தில் மாநில அரசோடும், மாவட்ட நிர்வாகத்தோடும் ஒத்துழைக்காமல் இன்று கல்லூரியை திறந்து, மாணவர்களை கட்டாயமாக வரச்செய்து, சர்வாதிகார போக்குடன் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டுள்ளது.
சுயாட்சி என்பது மாணவர்களின் கல்வி திறனையும், அவர்களின் திறமையையும் வெளிக்கொண்டு வர சுயமுடிவுகளை விரைவாக எடுப்பதற்காகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகிகள், பல்கலைக்கழகத்தை தங்களுக்கு பட்டா போட்டு வழங்கியதுபோல, ஆணவத்தோடு செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மாணவர்களுடைய உயிரோடு விளையாடும் இச்செயலை கண்டித்து கேள்வி எழுப்பினால், வெயில்தான் அடிக்கிறது. பெரும்பாலான பேராசிரியர்களும், மாணவர்களும் இங்கே தங்கி படிக்கின்றனர். நாங்கள் ஏன் விடுமுறை அளிக்க வேண்டும்? என பதில் கேள்வி எழுப்பி புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை கேலிக்கூத்தாக்குகின்றனர்.
புதுச்சேரி பல்லைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்துதான் செல்கின்றனர். அவர்கள் இன்று பெரும் மன உளைச்சலோடு கல்லூரிக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பல்கலைக்கழகம் முழு பொறுப்பேற்குமா?
புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு அளிக்க வேண்டிய 50 சதவீத வேலைவாய்ப்பு, அனைத்து பாடப்பிரிவிலும் புதுச்சேரி 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்த சர்வாதிகாரத்தை சுயாட்சி பல்கலைக்கழக நிர்வாகம் காட்டவில்லை. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தாளாளர் பொறுப்பு வகிக்கும் மேதகு துணைநிலை ஆளுநர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் பேரிடர் கால உத்தரவுகளை புதுச்சேரி பல்கலைக்கழகமும் பின்பற்ற மேதகு துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments