புதுச்சேரி நகரப் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மூன்று செல்போன்கள், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த 16-ம் தேதி சுப்பையா சாலை வழியாக நடந்து சென்ற மும்பையை சேர்ந்த சுற்றுலா பயணியின் விலை உயர்ந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர் ஒதியன்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் புஸ்சி வீதியில் ஒதியன்சாலை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு முன் முரணாக பதில் அளிக்கவே அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் திண்டிவனத்தை சேர்ந்த கோகுல கிருஷ்ணராஜ் என்பதும் இவர் மும்பை சுற்றுலா பயணியின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த வழிப்பறியில் மூன்று சிறுவர்களும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மூன்று செல்போன்களையும் வழிப்பறிக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் . தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments