வில்லியனூரில் பருவ மழையை எதிர்கொள்வது குறித்து கொம்யூன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவசர ஆலோசனை !
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மூன்று நாட்கள் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வில்லியனூர் தொகுதியில் கனமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் அவசர ஆலேசானைக் கூட்டம் நடைபெற்றது.
எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ரமேஷ், தாசில்தார் சேகர், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணன், வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்கள் குணசேகரன், ராஜேஷ் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உத்திரவாகினிப்பேட், எஸ்.எஸ்.நகர், ஒதியம்பட்டு தாங்கல் சாலை வாய்க்கால், தட்டாஞ்சாவடி, ஆத்துவாய்க்கால்பேட், பரசுராமபுரம், கிருஷ்ணா நகர், ஓம் சக்தி நகர், சிவகணபதி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க வாய்க்காலை தூர்வாரி மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், மழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதும், அவர்களுக்கு தேவையான உணவை வில்லியனூரில் ஒரே இடத்தில் செய்து கொடுக்க துரித நடவடிக்கை எடுப்பது, தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவது, கொம்யூன் பஞ்சாயத்தில் பல ஆண்டுகளாக ஜெனரேட்டர் இல்லாத நிலை உள்ளதை கருத்தில்கொண்டு உடனடியாக சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மழையினால் தங்கள் வீடுகளை இழந்த ஏழை மக்களுக்கு இன்னும் இந்த அரசு நிவாரணம் வழங்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. பேரிடர் காலத்தில் பாதிக்கும் மக்களுக்கு உதவாமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, மழை பாதிப்பால் வீடுகள் மற்றும் உடமைகளை இழக்கும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
No comments