மயிலாடுதுறை நகராட்சி 22-வது வார்டில் ஓராண்டுக்கு மேலாக பழுதடைந்துள்ள சாலையால் மழைக்காலத்தில் பொதுமக்கள் கடும் அவதி, ரூ.6.60 லட்சம் நிதி அளித்த தொழிலதிபர்:-
மயிலாடுதுறை நகராட்சி 22-வது வார்டில் 5-ஆம் நம்பர் புதுத்தெரு உள்ளது. இச்சாலை வழியாக நல்லத்துக்குடி, கோடங்குடி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஓராண்டாக இந்த சாலை கொஞ்சம் கொஞ்சமாக பெயர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில், அப்பகுதியில் தொழில் நிறுவனம் வைத்து நடத்திவரும் ராஜேஸ்வரன் என்பவர் நமக்கு நாமே திட்டம் 2024-2025-இன்கீழ் அந்த சாலையை செப்பனிட நிதி வழங்க ஒப்புதல் தெரிவித்தார்.
பொதுமக்கள் சாலை, குடிநீர் உள்ளிட்ட தங்கள் சமூக தேவைகளுக்காக நிதியை திரட்டி, அதை அரசுடன் இணைந்து பயன்படுத்தும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டம் நமக்கு நாமே திட்டத்தில் திட்டத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினை பொதுமக்கள் பங்களிப்புத் தொகையாக வழங்க வேண்டும். அந்த வகையில் சாலைப்பணியின் மொத்த திட்ட செலவான ரூ.20 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கான 6.60 லட்சத்துக்கான வங்கி காசோலையை, நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன், நகர்மன்ற உறுப்பினர் உஷா ஆகியோர் முன்னிலையில் நகராட்சித் தலைவர் செல்வராஜிடம் தொழிலதிபர் ராஜேஸ்வரன் வழங்கினார். இதன்மூலம் கடந்த ஓராண்டாக அப்பகுதியை கடந்து செல்ல கடும் சிரமம் அடைந்த பொதுமக்களுக்கு விரைவில் புதிய சாலையில் செல்ல வழிபிறந்துள்ளது.
No comments