மீஞ்சூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்த 6வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி; போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ராமாரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தடாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ராஜ்குமார் என்பவரது 6வயது மகன் கௌஷிக் அங்குள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை தமது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியே வந்த போது பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் 2நாய்கள் சிறுவனை சுற்றிவளைத்து கடித்து குதறியுள்ளன.
சிறுவன் நாய்களிடம் இருந்து தப்ப முயன்ற போதும் விடாமல் தலையில் நாய்கள் கடித்துள்ளன. இதில் சிறுவன் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து சிறுவனை மீட்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் அவ்வப்போது பொதுமக்களை கடிப்பது வாடிக்கையாக நடந்து வருவதாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments