சீர்காழியில் போலி பதிவெண் கார் பயன்பாடுத்திய. 4 பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழியில் போலி பதிவெண் பயன்படுத்தி வாகனத்தை இயக்கி வந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் பிள்ளையார் திருவாசல், வாஞ்சி ஆற்றங்கரையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஐயப்பன் ( 27) இவர் புதுச்சேரி பதிவெண் கொண்ட சாம்பல் நிற இனோவா காரை சொந்தமாக பயன்படுத்தி வருகிறார். இவர் காரைக்கால் மாவட்டத்தில் தனது காரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது செல்போனிற்கு தனது பதிவு எண் கொண்ட கார் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிகள் மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி அவரது செல்போனிற்கு தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் நமது கார் காரைக்கால் மாவட்டத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விதிகளை மீறி தனது கார் சென்றதாக அபராதம் எவ்வாறு விதிக்கப்படும் என பெரும் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-தேதி காரைக்காலில் இருந்து புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் காரைக்கால் செல்வதற்காக தனது இனோவா காரில் சீர்காழி புறவழிச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராமல் இவரது காருக்கு முன்பாக தனது கார் பதிவு எண்ணை கொண்ட வேறொரு சாம்பல் நிற இனோவா கார் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அந்த காரை விரட்டிச் சென்று வழிமறித்து இந்த பதிவு எண் தொடர்பாக கேட்டுள்ளார். அப்பொழுது காரில் இருந்த நான்கு பேர் ஐயப்பனை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்து அங்கிருந்து காரில் சென்று விட்டனர். இது குறித்த ஐயப்பன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் காயத்ரி, சேதுபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி அதிகாலை கோவில்பத்து புறவழிச்சாலையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட சாம்பல் நிற இனோவா காரை வழிமறித்து சோதனை செய்ததில் வேறொரு காரின் பதிவு எண்ணை பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து சீர்காழி போலீஸார் வழக்கு பதிவு செய்து காரில் இருந்த சீர்காழி கோவில்பத்து கீழஅகணி கிராமத்தைச் சேர்ந்த அ.மனோ (33), சீர்காழி பணங்கட்டான்குடி ரோட்டை சேர்ந்த வே.சச்சிதானந்தம் (45), சீர்காழி திருக்கருக்காவூர் வடக்கு தெருவை சேர்ந்த செ. பாலகுரு (32), கொண்டல் கீழத்தேனூர் கிராமத்தை சேர்ந்த வீரபாண்டியன் மகன் மதன்சிங் (27), ஆகிய நான்கு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கூறுகையில், வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் போது வாகனத்திற்குரிய சான்றிதழ்களை முறையாக வைத்திருக்க வேண்டும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments