மயிலாடுதுறையில் "நான் முதல்வன் திட்டத்தின் உயர்வுக்குபடி” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் “நான் முதல்வன் திட்டத்தின் உயர்வுக்குபடி” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு பேசியபோது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேராத, 10, 11, 12-ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட மாணவ, மாணவிகள் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், திறன் பயிற்சிகள் போன்ற ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உயர்கல்வி படிக்க வழிவகை செய்யும் வகையில் கல்விக்கடன் வசதிகள்.
பல்வேறு துறைகளால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது உள்ள காலியிடங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் தொழில்நெறி வழிகாட்டுதல் உட்பட அரசின் பல்வேறு உயர்கல்விக்கு வழிகாட்டும் நலத்திட்டங்கள் தொடர்பாக அரங்குகள் அமைத்து வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது.
நடைபெறும் நாள் மற்றும் இடம்: இந்நிகழ்ச்சி எதிர்வரும் 10.09.2024 செவ்வாய்கிழமையன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மயிலாடுதுறை தாலுகாவில் தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரியிலும், 13.09.2024 வெள்ளிகிழமையன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேராத, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பில் இடை நின்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோரும் கலந்துகொண்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி, தெரிவித்துள்ளார்.
பின்னர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் "நான் முதல்வன் திட்டத்தின் உயர்வுக்குப்படி" கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி முன்னேற்பாடு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments