புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை டி.டி.டி.ஏ. பி.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரகிரி ஊராட்சி, புதுக்கோட்டை டி.டி.டி.ஏ. பி.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் நவீன ஆய்வுக்கூடத்திற்கு டிவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சோப்பார் ஜோதிபால் வரவேற்றார். தூத்துக்குடி & நாசரேத் திருமண்டல உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், லே&செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், தொடக்கப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா தலைமை வகித்து பள்ளியின் நவீன ஆய்வுக்கூடத்திற்கு புதிய டிவியை துவக்கி வைத்தார். பின்னர், மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வீட்டில் இருந்து நடந்து வரும் மாணவர்களுக்காக விலையில்லா சைக்கிள், காலையில் சாப்பிடாமல் பசியுடன் வந்து கல்வி கற்கும் மாணவர்களின் பசியை போக்க தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, நான் முதல்வன் திட்டம், உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எனவே, மாணவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக படித்து உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும். மேலும், நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதுபோல் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு சென்று அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வில் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், திமுக தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் சண்முகநாராயணன், தொழிலாளர் அணி மொபட் ராஜன், தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், வர்த்தக அணி பொன்செல்வன், ஓட்டுநர் அணி மகாலிங்கம், கிளைச் செயலாளர்கள் பால்சாமி, சஞ்சய்குமார், அந்தோணி, பூவலிங்கம், ஜம்புலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அன்னாள ஆனந்தக்கனி நன்றி கூறினார்.
No comments