அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பலி.
பொன்னேரி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. உறவினர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஹரிபிரசாத் (48). நேற்றிரவு பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை விவசாயி ஹரிபிரசாத் வழக்கம் போல தமது நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.
மோட்டார் ஷெட்டிற்குள் ஹரிபிரசாத் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக மோட்டார் ஷெட் மீது அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஹரிபிரசாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற வாசு மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து திரண்டு வந்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முற்பட்ட பொதுமக்களை காவல்துறையினர் சமரசம் செய்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மின்வாரிய அதிகாரிகள் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே சிறுமழைக்கே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். வயலுக்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments