திருப்பத்தூர் அருகே 1400 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில்; கும்பாபிஷேகம் நடைபெற சுமங்கலி பூஜை.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலம் கிராமத்தில் அருள்மிகு திருமேனிநாதர் சௌந்தரநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கருங்கல்லால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சிவன் கோவிலாகும். இக்கோவில் பராமரிப்பு பணிகள் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் இதில் கும்பாபிஷேக பணிகள் ஏதும் நடைபெறாமலும், புனர்நிர்மாண பணிகள் செய்யப்படாமலும், கோவிலும், அதனை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் வளாகமும், ராஜ கோபுர கலசங்களும் முற்றிலும் செதிலமடைந்த நிலையில் இருந்து வருகிறது.
இதனால் கோவில்கருவறையில் இருக்க வேண்டிய அம்மன் வெளியே தகரத்தினால் அடிக்கப்பட்ட செட்டில் வைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் தோஷங்கள் நீங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு 54 பெண்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது.மேலும் இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நாககன்னிக்கும், பல ஆண்டு தவமிருந்த சித்தரின் சமாதிக்கும் அர்ச்சகர் இல்லாமல் ஆண் பெண் இருபாலரும் அர்ச்சகர்களாக மாறி அபிஷேகம் செய்யும் நிகழ்வானது காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.
மேலும் இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் வருகை புரிவது மட்டுமல்லாமல் மதுரை புதுக்கோட்டை சிவகங்கை காரைக்குடி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாதம் தோறும் அஷ்டமி தினத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி பல அம்சங்களைக் கொண்ட பழமை வாய்ந்த இக்கருங்கள் கோவிலை புனர்நிர்மாணம் செய்ய அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வருகை புரியும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments