தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் காலி மனைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! மேயர் ஜெகன் வேண்டுகோள்..
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் காலி இடங்களில் மழைநீர் தேங்காதவாறு அதன் உரிமையாளர்கள் மணல் கொண்டு நிரப்ப வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதனை உடனடியாக அகற்ற மாநகராட்சி மேயர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 4 ஆம் ரயில்வே கேட், எஸ்.பி.எம்.நகர், முத்துகிருஷ்ணாநகர், பி.என்.டி காலனி, அன்னை தெரசாநகர் மற்றும் பி.எம்.சி பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில்:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிய மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், ஏற்கனவே உள்ள கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் புதிய தார்சாலை, பேவர்பிளாக் சாலை அமைத்தல், உயர்மின்கோபுர விளக்குள், புதிய பூங்காக்கள், மாணவர்களுக்கான நூலகங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடியில் மாநராட்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் மழைநீர் தேங்காதவாறு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மாநகராட்சி சார்பில் துரிதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் காலி இடங்களில் மழை நீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படவும், கொசுக்கள் உற்பத்தியாகவும் காரணமாக அமைகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, தனியார் மற்றும் தனிநபர் காலியிடங்களின் உரிமையாளர்கள் தங்கள் இடங்களில் உள்ள பள்ளங்களை மணல் கொண்டு நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன் என்றார்.
இந்த ஆய்வின்போது, திமுக வட்டச் செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜாண் சீனிவாசன், ராமர், போல்பேட்டை திமுக பிரதிநிதிகள் ஜேஸ்பர், பிரபாகரன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments