தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (தருவை) மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு மாத காலமாக தடதள போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் சைக்கிள் உபயோகித்து வந்தனர். அதனால், உடல் ஆரோக்கியத்துடன் நலமாமுடன் வாழ்ந்தனர்.
உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். அதேபோல் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட்டு இருப்பது அவசியம். மேலும், அனைத்து வயதினரும் தினமும் 30 முதல் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறைக்கு பல்வேறு வகையில் நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி வருகிறது. கிராமப்புறம் மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் பங்கேற்று சாதனைகள் படைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் அதில் 8 மணி நேரம் தூங்குவது போக மீதி 16 மணி நேரம் படிப்பு விளையாட்டு உடற்பயிற்சி என மேற்கொள்ள வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. ஒருநாள் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம் என முயற்சி செய்தால், உறுதியாக அது வெற்றியாக மாறும் என்றார்.
விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அதிர்ஷ்டராஜ், அருட் சகோதரிகள் அருள்மரியநேசம், செலின், பயிற்சியாளர் ரவி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
No comments